மிக நீண்ட குத்துச்சண்டைப் போட்டி நடந்த நாள் இன்று (பிப்ரவரி 2). கற்காலத்தில் இருந்தே மனிதர்கள் ஆடிவந்த விளையாட்டுகளில் ஒன்று குத்துச்சண்டைப் போட்டி. ஆரம்ப காலகட்டங்களில், அதாவது கற்காலத்தில் குறிப்பிட்ட கால நேரத்துக்குள் போட்டியை முடிக்க வேண்டும் என்ற விதிகளெல்லாம் கிடையாது. போட்டியில் ஏதாவது ஒரு வீரர் மயக்கமுற்று கீழே விழும் வரை குத்துச்சண்டை போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. கிரேக்கர்களால் 3000 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், தங்கள் கைகளில் தோல்களால் ஆன கையுறைகளை அணிந்திருந்ததாக வரலாறு கூறுகிறது.

அதன்பிறகு காலப்போக்கில் சில விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 3 நிமிடங்கள் கொண்ட சுற்றுகளைக் கொண்டதாக குத்துச்சண்டை போட்டிகள் உருவாக்கப்பட்டன. இந்த சூழலிலும் குத்துச்சண்டை போட்டி எத்தனை நிமிடங்கள் அல்லது எத்தனை சுற்றுகள் நடைபெற வேண்டும் என்ற விதிகளெல்லாம் வகுக்கப்படவில்லை. இந்த சூழலில்தான் 1892-ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹாரி ஷார்ப் மற்றும் பிராங்க் க்ரோஸ்பி ஆகிய 2 வீரர்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. மிக ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த குத்துச்சண்டை போட்டி நீண்ட நேரத்துக்கு முடிவில்லாமல் தொடர்ந்தது. 65 சுற்றுகளுக்கு பிறகு, இந்த போட்டியைக் கண்காணித்து வந்த நடுவர்களுக்கே சோர்வு ஏற்பட்டு, அவர்கள் எழுந்து போனார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்