
ஆ ஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் அணிந்திருந்த உடை, அனைவரையும் கவர்ந்தது. பொதுவாக டென்னிஸ் வீராங்கனைகள் குட்டைப் பாவாடை அணிந்துதான் ஆடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒரு காலில் ஷார்ட்ஸ், மறு காலில் பேன்ட் என்று கொஞ்சம் வித்தியாசமான உடையை அணிந்து ஆடினார் செரீனா வில்லியம்ஸ். டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் செரீனாவின் ஆட்டத்தைப் போலவே அவரது உடை அமைப்பும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
வித்தியாசமான இந்த உடை அமைப்பைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “விளையாட்டு உலகில் இதுபோன்று உடை அணிந்து ஆடுவது ஒன்றும் புதிய விஷயமில்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே புளோரன்ஸ் கிரிபித் ஜாய்னர் என்ற வீராங்கனை இதேபோன்று உடை அணிந்து ஆடியுள்ளார். புகழ்பெற்ற தடகள வீராங்கனையும், ஒலிம்பிக்கில் 5 பதக்கங்களை வென்றவருமான அவர் வித்தியாசமான ஆடைகளை அணிவதிலும் புகழ்பெற்றவர். சிறுவயதில் அவர் அணியும் ஆடைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போது அவரைப் போலவே ஆடைகளை அணிய நான் மிகவும் விரும்பினேன். அந்த கனவு இப்போது நனவாகி உள்ளது. அவர் அணிந்த ஆடைகளில் ஒன்றைத்தான் நான் புத்தாக்கம் செய்து இந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பயன்படுத்தினேன். இது இந்த அளவுக்கு ரசிகர்களைக் கவரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments