அமெரிக்காவின் புகழ்பெற்ற தடகள வீரராக இருந்த ஜெஸ்சி ஓவன்ஸ், 1935-ம் ஆண்டில் இந்த நாளில்தான் (மே 5) 8.13 மீட்டர் நீளம் தாண்டி, இப்போட்டியில் புதிய உலக சாதனையைப் படைத்தார்.

ஜெஸ்சி ஓவன்ஸின் முழுப் பெயர் ஜேம்ஸ் கிளீவ்லேண்ட் ஜெஸ்சி ஓவன்ஸ். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 1913-ம் ஆண்டில் அவர் பிறந்தார். ஜெஸ்சி ஓவன்ஸின் பெற்றோருக்கு மொத்தம் 10 குழந்தைகள். இதில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் 10-வது குழந்தை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், ஜெஸ்சி ஓவன்ஸ் சிறு வயதில் பல்வேறு வேலைகளைச் செய்து குடும்பத்துக்கு உதவியாக இருந்துள்ளார். மளிகைக்கடை பொருட்களை வீட்டுக்கு கொண்டுபோய்க் கொடுக்கும் வேலை, செருப்பு தைக்கும் வேலை, கார் மற்றும் லாரிகளில் லோடு ஏற்றுவது என பல்வேறு வேலைகளை அவர் செய்துள்ளார். இந்த சமயத்தில் அவர் படித்த பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக இருந்த சார்லஸ் ரிலே என்பவர், அவருக்கு ஓட்டப்பந்தயத்தில் சிறப்பான எதிர்காலம் இருப்பதாக கணித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெஸ்சி ஓவன்ஸுக்கு அவர் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளார். ஆசிரியரின் கணிப்பு தவறவில்லை. பின்னாளில் அமெரிக்காவின் தலைசிறந்த தடகள வீரராக ஜெஸ்சி ஓவன்ஸ் உருவெடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்